
லக்ஷ்மிக்கு மனது சங்கடமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் எப்படி தனியாக இந்த பிரச்சினையை சமாளிக்கப் போகிறார்கள் என மனது வருத்தப்பட்டார்.
தொடர்ந்து சங்கு புஷ்பம் அனுப்பும் செய்திகளில் இருந்து அங்கு என்ன நிலவரம் என தெரிந்து கொண்டார். செய்தி கேட்டதிலிருந்து இணையத்தில் இந்த தேர்தல், இதற்கு முன் நடந்த தேர்தலின் முடிவுகள் மற்றும் வாக்காளர் தகவல்கள் என எல்லா விஷயங்களையும் தேடி தேடி படித்தார்.
தனக்கு கிடைத்த எல்லா விஷங்களையும் அம்மாவுக்கு அனுப்பி வைத்தார். ஏதாவது ஒரு வகையில் அது அவர்களுக்கு உதவலாம் என் நம்பினார்.
கேண்டிடேட்டு புஷ்பாவுக்கு எதிராக டாக்டர் நேசமணி.
டாக்டர் நேசமணிக்கு வரும் வாக்குகளை பிரிக்க மற்றும் மக்களை குழப்ப அதே பெயரில் இருக்கும் சிலரை டம்மி வேட்பாளர்களாக நிறுத்துவது. சில வார்டுகளில் சொற்ப வாக்குகளில் வெற்றி வித்தியாசம் இருந்தது. ஆளும் கட்சி, எதிர் கட்சி, பிற வளர்ந்து வரும் கட்சிகள் ஏன் சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக கூட கடந்த தேர்தலில் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டதை கவனித்தார். அது கேண்டிடேட்டு லிஸ்டில் அப்பட்டமாக தெரிந்தது.
யார் இதை செய்தார்கள் என பெரும்பாலும் பொது வெளியில் தெரியாது.
பாதிக்கும் மேற்பட்ட வார்டுகளில் இந்த போக்கு காணப்பட்டது.
படித்த வாக்காளர்களும் பாமரர்களும் பெரும்பாலும் அவர்கள் வார்டின் முழு லிஸ்டையும் அலசி ஆராய்வதில்லை. அது தெரிந்தாலும் பெரிதாய் எடுத்து கொள்வது இல்லை.
கேண்டிடேட்டு மற்றும் வாக்காளர்களும் இடையே இதில் நுட்பமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த டம்மி கேண்டிடேட்டுகள்.
அவர்கள் அரசியல் மற்றும் பொது வாழ்வில் இல்லாமல் இருக்கும் சாமானிய மக்கள்.
அவர்களுக்கு இருக்கும் தேவைகள் அல்லது பலகீனங்களின் காரணமாக டம்மியாக களம் காண்பவர்கள்.
அவர்களின் பெயரையும் சுய மரியாதையும் ஏதோ ஒரு அழுத்தம் அல்லது நிர்பந்தம் காரணமாக விலைக்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுபவர்கள்.
லக்ஷ்மி கடந்த தேர்தல் முடிவுகளை மீண்டும் ஒரு முறை எடுத்துக் பார்த்தார்.
எந்த ஒரு வார்டிலும் அதில் போட்டியிட போகும் நபரை அந்த கட்சி சார்ந்த அல்லது அரசியல் தொடர்புடைய நபர்களுக்கு மட்டுமே இவர் வேட்பாளராக வருவார் என தெரிந்திருக்கும்.
பிரபலமான சுயேச்சை என்றால் கூட ஊகிக்க முடியும்.
ஆனால் பொது ஜனத்துக்கு தெரியவோ ஊகிக்கவோ வாய்ப்பு மிக குறைவு.
அதனால் இந்த அணுகுமுறையின் ஊற்றுக் கண் பொது ஜனம் அல்ல, கட்சி சார்புடையவர்கள் என முடிவுக்கு வந்தார்.
அன்றாட வாழ்க்கையை ஓட்டவே அல்லல் படும் பொது ஜனம் கண்டிப்பாக இந்த குறுக்கு வழி வாய்ப்பை பற்றி சிந்திக்கவோ அல்லது அது தொடர்பான தகவல்களை அணுகவோ இயலாதவர்கள்.
அடி மட்டத்தில், சமூக அல்லது பொருளாதார செல்வாக்கு இல்லாதவர்களாக இருக்கும் இவர்களை குறி வைத்து செய்யப்படும் இந்த இழி செயல் தடுக்கப் பட வேண்டும் என நினைத்தார் லக்ஷ்மி. இதை செய்பவர்கள் பொது சமூகத்தில் ஆதாரத்தோடு வெளிப்பட வேண்டும் என எண்ணினார்.
அந்த வார்டில் பதினாறாயிரம் வாக்காளர்கள் இருந்தார்கள் பட்டியலில். லக்ஷ்மி அந்த லிஸ்டை பிரிண்ட் எடுத்தார். நன்றாக படிக்கும் சில மாணவிகளை அழைத்து நேசமணி மற்றும் புஷ்பா பெயர் உள்ளவர்களை குறித்துக் கொள்ள சொன்னார்.
அதில் எல்லா காம்பினேஷன்களும் அடக்கம். வெறும் புஷ்பா மட்டுமல்லாமல் புஷ்பவல்லி, புஷ்ப குமாரி, புஷ்பா ராஜ் என ஆண் மற்றும் பெண் பெயர்களும் தேடப்பட்டது.
அதே போல நேசமணி என்ற பெயருக்கும். நேசமலர், நேசகொடி, நேசசெடி என எது இருந்தாலும் குறித்துக் கொண்டார்கள்.
முழு லிஸ்டும் ரெடியானது. புஷ்பா பெயரில் பதினெட்டு பேர். நேசமணி காம்பினேஷனில் மூன்று பேர்.
எல்லாவற்றையும் ஒரு எக்சல் ஷீட்டில் போட்டு அம்மாவுக்கு அனுப்பினார் லக்ஷ்மி. அந்த லிஸ்டில் சங்கு புஷ்பமும் இருந்தார்.