Tamil novel – OTP – part 14/20

A senior woman checking the news in the internet

காபி குடிக்கும் நேரம் இரண்டு தரப்பும் தங்களை கொஞ்சம் தயார் படுத்திக்கொண்டார்கள். “கண்டிப்பா ஜெயிக்க வெச்சுடுவீங்களா” என்றார் நேசப்பா.

ரத்தினம் சற்று முன்னே வந்து “இல்ல சார், எங்க ஆளு ஜெயிக்க வியூகம் சார் இது” என்றார்.

“அப்போ நா தோக்கணுமா?” என நெருடலாய் கேட்டார் நேசமணி.

“அதுக்காகத்தான் சார் இந்த ஆபர். ஜஸ்ட் கொஞ்சம் கோஆப்பரேட் பண்ணீங்கன்னா ஈஸியா ஒரு அமௌண்ட் பாக்கலாம்” என்றார் ரத்தினம்.

பல முறை பேப்பரில் படித்த செய்தி இப்போது அவர் முன்னே மலையாய் வந்து நிற்கிறது. திரும்பி சங்கு புஷ்பத்தை பார்க்க, தொடருங்கள் என்பது போல அவர் தலையை ஆட்டினார். தன் சுயமரியாதையின் விலை பட்டியலிடப்பட்டு பேரத்தில் இருப்பது உறுத்தியது. சற்று பிறகுதான் அது வெறும் தன் பெயருக்கான விலை என்று புரிந்தது. மூச்சை இழுத்து விட்டு சாய்ந்து உட்கார்ந்தார் நேசப்பா.

தோத்தா எனக்கு கெட்ட பேராச்சே சார்” என்றார் நேசப்பா.

அதெல்லாம் கொஞ்ச நாள்ல ஜனங்க மறந்துடுவாங்க சார். உங்க லாபத்தை மட்டும் பாருங்க சார். ஒண்ணுமே பண்ணாம உக்காந்த இடத்துல இருந்து ஒரு வாய்ப்பு. இது எல்லாருக்கும் கிடைக்காதுங்க. திரும்பவும் வரும்னு சொல்ல முடியாதுங்க. யோசிச்சு சொல்லுங்க சார்” என மண்டையை கழுவ ஆரம்பித்தார் ரத்தினம்.

அவரின் அனுபவம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்தது.

ரத்தினத்திற்கு அவர் நாலு வரி முழுதாய் பேசி முடித்த பிறகு தான் நம்பிக்கையை உணர்ந்தார். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் எப்படியும் முடிக்கலாம் என நினைத்தார்.

நேசப்பா இயல்புக்கு வந்தார். இன்னும் கொஞ்சம் போட்டு வாங்கலாம் என ஆரம்பித்தார்.

“என் பேருக்கு வெறும் மூணு எல் தானா? என்றார். பேரம் ஆரம்பித்தவுடன் ரத்தினத்திற்கு உள்ளே பெருமை பொங்கியது.

இந்த ரத்தினம் பேசினா எந்த கொம்பனும் மடங்கிடுவான் என குதூகலித்தார். என்ன பேச்சுடா சாமி பேசுனாங்க ரெண்டு பேரும் என எரிச்சலானார்.

பல்வேறு உணர்ச்சிகள் அவரை ஆட்கொள்ள, அதில் சிறிது அவரின் உடலிலும் முகத்திலும் தெரிந்தது.

“தோக்கணும், அசிங்கப்படணும், பேரும் கெட்டு போகணும், சொசைட்டில நடமாட முடியாது சார். இவ்வளுவுக்கும் விலை மூணு எல் னா சரிபடாது சார்”, என முகத்தை சுளித்தார் நேசப்பா.

ரத்தினத்திற்கு பொறுமை கொஞ்சம் ஆட்டம் கண்டது.

“சார் நாலு எல் பைனல் பிளஸ் உங்க எல்லா செலவும் எங்களோடது.

சொசைட்டில நடமாட முடியாதுனு பீல் பண்ணீங்கன்னா ஒரு மாசத்துக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஊட்டில ஏர் பிஎன்பில தங்க ஏற்பாடு பண்ணித்தரேன். போய் வர்ற செலவையும் ஏத்துக்கறேன்” சர சரவென பேசி தீர்த்தார் ரத்தினம்.

உயிரோடு பிணமாகவும், தலை குனிந்து நடக்கவும், தலை மறைவாய் வாழும் வரையும் திட்டம் தருவது நேசப்பாவை உலுக்கி எடுத்தது. மிக சாதாரணமாய் ஆரம்பித்த ஒரு சந்திப்பு கொதிநிலையின் உச்சத்திற்கு அவரை கொண்டு சென்றது. தேர்தல் வெற்றிக்காக சக மனிதனை விலை பேசுவது, அந்த சமூகத்தில் எளிய விளிம்பு நிலையில் இருக்கும் வாக்காளர்களை குழப்பி, தவறாக வழி நடத்தி ஆதாயம் காண்பது என அராஜகத்தின் முழு உருவமும் அவர் முன்னே விஸ்வரூபமாய் நின்றது.

வாழ்நாள் முழுவதும் நேர்மையாகவும் வலுவான தார்மீக கொள்கை பிடிப்புள்ளவராகவும் எல்லா சூழ்நிலைகளையும் சந்தித்தவர் நேசப்பா. அவர் கண்ணியத்தின் மீதும் நன்னெறிப் பண்புகள் மீதும் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு, அவரின் தனிப்பட்ட விழுமியங்கள் சூறையாடப்படும் அபாயத்திலிருந்தது. சமூக, அரசியல் மற்றும் பண செல்வாக்கோடு மூர்க்கமாகவும் அலட்சியமாகவும் நடத்தி அவரை இணங்கிப் போகும்படி செய்துவிடலாம் என எந்த எல்லைக்கும் செல்பவராக ரத்தினம் இருந்தார்.

பொருளாதார ரீதியாகவோ மன வலிமை ரீதியாகவோ பலகீனமானவர்களை எளிய இலக்குகளாக குறி வைக்கிறார்கள் ரத்தினம் போன்றவர்கள்.

உறுதியாகவும், மன உந்துதலோடும், நிதானமாக உணர்வுகளை கட்டுக்குள் வைத்தும் இந்த இழிவான போக்கில் சிக்காமல் இருக்க வழி வகைகளை சிந்தித்தார்கள் நேசப்பாவும் சங்கு புஷ்பமும்.

“ஓ.டி.பி வந்திருக்கு நேஸ். டென்ஷன் ஆகாதீங்க” என்றார் சங்கு புஷ்பம் சிஸ்டத்தில் பார்த்தபடியே. போனை எடுத்து குறுஞ்செய்தியை படித்தார் நேசப்பா.

“ஒரு திமிரெடுத்த பொறம்போக்கு” என செய்தி அனுப்பி இருந்தார் சங்கு புஷ்பம்.

லேசாக புன்னகைத்த படியே வாய்க்கு வந்த நாலு இலக்க எண்ணை சொன்னார் நேசப்பா.

ஓ.டி.பிக்கு எதுக்கு டென்ஷன் ஆவணும், இவரு ஏன் சிரிக்கணும் என முழித்தார் ரத்தினம்.

Leave a comment