Tamil novel – OTP – part 15/20

“சார், பதினொன்னு நாப்பது ஆகுது. லாஸ்ட் டென் மினிட்ஸ்” என்றார் சங்கு புஷ்பம்.

டீலிங் படகு நடு கடலில் இருக்கிறது ரத்தினத்திற்கு. டைம் அவுட் வெளியே குதி என்பது போல் சொன்னார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா சார் கிட்ட இன்னும் நெறய விஷயம் பேசணும். கொஞ்சம் நேரம் ஆகும்” கடுப்பை அடக்கியபடி சொன்னார் ரத்தினம்.

“அப்போ டைம் எக்ஸ்ட்டென்ஷன்க்கு பே பண்ணிடுங்க சார் இப்போ” என்றார் சங்கு புஷ்பம்.

“ஏம்மா பேசி முடிச்சிட்டு கடைசியா போகும்போது குடுத்துட்டு போறேன்” என்றார் ரத்தினம்.

“சார் அரை மணி நேரமா இல்ல ஒரு மணி நேரமான்னு சொல்லிட்டு பே பண்ணிடுங்க. நாங்க நெக்ஸ்ட் அப்பாயின்ட்மென்ட் அட்டென்ட் பண்ணனும்” என அசால்ட்டாக சொன்னார் சங்கு புஷ்பம்.

தங்களுக்கு வெளியே யாரும் லைன் கட்டி நிற்கவில்லை. இவர் கிளம்பினால் சாப்பிட்டு ஆளுக்கு நாலு மாத்திரை போட்டுக் கொண்டு இழுத்துப்போர்த்தி தூங்கத் தான் போகிறோம்.ஆனாலும் சங்கு ரத்தினத்தை சத்தாய்ப்பது நேசப்பாவிற்கு ஆனந்தமாக இருந்தது.

எரிச்சலோடு மீண்டும் கதவோரம் போய் அவரின் ட்ரெஷரு ட்ரோவு ட்ரவுசரிலிருந்து கரன்சியை எடுத்தார்.

“இந்தாங்க, ரெண்டாயிரம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு” என் நீட்டினார் ரத்தினம்.

“சார், பன்னெண்டு அம்பதுக்கு உங்க டைம் முடியும்” கரன்சியை எண்ணியபடியே சொன்னார் சங்கு புஷ்பம்.

பிறகு நிதானமாக மேஜை மீது கரன்சியை பரப்பி அதன் மீது டேபிள்வெயிட் வைத்தார். பக்கத்தில் இருந்த சேனிட்டைசரால் கைகளை துடைத்துக்கொண்டே “நோட்டு கொஞ்சம் ஈரமா இருக்குங்க.காசு மஹாலக்ஷ்மி  சார். இவ்ளோ பெரிய கட்சியில எப்பேர்ப்பட்ட பொறுப்புல இருக்கீங்க. ஒரு நல்ல பர்ஸா வாங்கி யூஸ் பண்ணுங்க சார். அந்த பர்ஸ்ல நாலு ஏலக்கா, நாலு கிராம்பு அப்புறம் கொஞ்சம் பட்டை எல்லாம் ஒரு பச்சை கலரு துணில சுத்தி வைங்க. அப்புறம் பாருங்க உங்க கிராப் எங்க போகுதுன்னு” என வாஞ்சையாய் சொன்னார் சங்கு புஷ்பம்.

ட்ரவுசர் போட ஆரம்பித்த காலத்திலிருந்து அது தான் கல்லாப்பெட்டி ரத்தினத்திற்கு.

அடி வயிற்றில் குத்திய ரணம் ஆருகையில் அவர் ஈகோவில் ஒரு இடி இடித்தார் சங்கு புஷ்பம்.

“எப்பேர்ப்பட்ட பொறுப்புனு ” இந்த அம்மா சொல்லுற மாதிரி தான் எந்த பொறுப்புல இருக்கோம்னு குழம்பினார்.

“நாலு எடத்துக்கு போறவரு. பெரிய மனுஷங்களை பாக்குறவரு நீங்க போற எடத்துல எல்லாம் ஒதுக்குப்புறம் தேட முடியுமா. இப்ப வேற எல்லா மூலை முடுக்குலேயும் சிசிடிவி கேமரா இருக்கு” என ஒரு எக்ஸ்ட்ரா பாயிண்ட்டை போட்டார் சங்கு புஷ்பம்.

பகீரென்று ஆனது ரத்தினத்திற்க்கு. பர்ஸ் வாங்கி விட்டுத்தான் மறு வேலை என உறுதியெடுத்தார்.

சக டிரௌசர் கோஷ்டியையும் அலெர்ட் செய்ய வேண்டும் என குறித்துக்கொண்டார்.

வந்த வேலைக்கு பிள்ளையார் சுழி கூட போடாத நிலையில் நாலாயிரம் பணால். இன்னும் இவர்களை வைத்து எப்படி மொத்த டீலிங்கையும் முடிப்பது என நாக்கு தள்ளிப்போனார் ரத்தினம்.

நேசப்பாவிற்கு யோசிக்க நேரம் நிறைய கிடைத்தது.

தொடர்ந்து சங்கு புஷ்பம் ரத்தினத்திடம் பேச்சு கொடுத்துக்கொண்டே போனிலும் சிஸ்டத்திலும் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தார் நேசப்பா.

இப்போது அவர் நிராயுதபாணி. அவர் எதிரே இருக்கும் ரத்தினத்தை நேருக்கு நேர் கையாளுவதே அவருக்கு சவாலான காரியமாக இருந்தது. அதனால் சங்கு புஷ்பம் கொடுக்கிற குறிப்புகளை கொண்டு இந்த சூழ்நிலையை எதிர் கொள்வது என முடிவெடுத்தார்.

சங்கு புஷ்பத்தின் மனம் வேதனையாய் இருந்தது. தலை மறைவு வாழ்க்கை வரை நேசப்பாவை கொண்டு சென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

நமக்கு விருப்பமில்லை என சொல்லி ஒதுங்கிக்கொள்ளலாம். ஆனால் இவர் வேறு இரையை போய் தேடுவதை நிறுத்த முடியாது. எனவே ரத்தினத்திற்கும், அவரின் ஆருயிர் அண்ணனுக்கும்,அருமை அண்ணியின் வெற்றிக்கும்  கன்னி வெடி வைக்க வேலையை ஆரம்பித்தார்.

“நா மட்டுந்தானா இல்ல வேற யாராவது இந்த பேர்ல இருக்காங்களா உங்க டீலிங்க்ல” என அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார் நேசமணி.

இக்கட்டான கேள்வி இது ரத்தினத்திற்கு. அவர் இன்னும் டிரௌசர் ட்ராமாவிலிருந்தே வெளியே வரவில்லை.

பர்ஸ் பச்சைக்கலரு துணி என மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவரை வாலன்டரியாக வண்டியில் தூக்கிப் போட்டார் நேசப்பா.

குமாரு, சேகரு என வேட்பாளராக இருந்தால் தெருவுக்கு தெரு அந்த பெயரில் ஆட்கள் இருப்பார்கள்.

பேரம் அவசியமில்லை. ரெண்டு மூணு பலகீனமான ஆட்களை தேற்றி விடலாம்.

இந்த நேசமணி, அலெக்சாண்டர் எல்லாம் இம்சை புடிச்ச பேர்கள். எங்காவது ஒன்றிரண்டு தான் இருக்கும். அதில் ஒன்று வேட்பாளராக இருக்கும். அந்த வார்டில் மாற்றுக்கு எங்கே தேடுவது.

என்ன சொன்னாலும் சிக்கல். இவர் ஒருத்தர் தான் என்றால் ரேட் இன்னும் ஏற்றுவார்.

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்குங்க. நம்ம மேட்டர முடிக்கலாம்” என அவசரம் காட்டினார் ரத்தினம்.

“இல்ல நாங்க ஒரு சங்கமா இருந்தா நல்லது பாருங்க” அதான் கேட்டேன் என சொன்னார் நேசப்பா.

சங்கமா, இவங்க ரெண்டு பேரையே சமாளிக்க முடியல. இதுல இவங்க செட்டு சேந்தா அவ்வளவு தான் என பயந்தார் ரத்தினம்.

“நீங்க ஒருத்தரரு தாங்க” என பம்மினார்.

நேற்று வரை அரசியல் வாடையே இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள்.

இந்த காலை பொழுது அவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

சங்கு புஷ்பமும் கார்பொரேஷன் மற்றும் தேர்தல் ஆணைய வெப்சைட் என எல்லாவற்றையும் துழாவினார். ஓரளவிற்கு அவருக்கு விஷயம் பிடிபட்டது.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் டவுன்லோட் செய்து ப்ரிண்டு எடுத்தார்.

நேசப்பா பேசிக்கொண்டே இருக்க பிரிண்டர் சரக் சரக்கென்று ஓயாமல் வேலை செய்து கொண்டிருந்தது.

“ரத்தினம் நம்பர விசிட்டர் நோட்ல எழுதி இருப்பார். அத எனக்கு வாட்சப் பண்ணுங்க” என செல்லகுமாருக்கு செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.

அடுத்த செய்தி கல்பனாவுக்கு. சிட்டி போலீசில் வேலை செய்பவர். பி ப்ளாக்கில் குடியிருக்கிறார். இந்த சொசைட்டிக்கு வருவதற்கு முன்பே சங்கு புஷ்பத்திற்கு பழக்கம். அடிதடி, கத்தி குத்து, ஆக்ஸிடெண்ட், சூசைட் அட்டெம்ப்ட் என எல்லா கேசும் ஜி.எச்சுக்கு தான் வரும்.

“சிஸ்டர், இந்த கேஸ கொஞ்சம் மானிட்டர் பண்ணுங்க” என சங்கு புஷ்பத்திடம் உதவிக்கு வருவார் கல்பனா.

அந்த வார்டுல எந்த சிஸ்டர் ஷிப்ட்ல இருக்காங்க என பார்த்து சர்வைலென்சுக்கு சொல்லி வைத்து விடுவார் சங்கு புஷ்பம்.

நைட் ஷிப்ட் நர்சஸம்மா தலைய டேபிள்ள கவுந்துக்கிட்டு தூங்குது என என்ன பேசினாலும் கல்பனா காதுக்குப் போய்விடும். ரெண்டு தனிப்படை போட்டாலும் கிடைக்காத ரிசல்ட் அது.

ஆள் பேரு இரத்தின முத்து சேகர். வயசு அம்பது கிட்ட. கட்சி பேரு ஏரியா பேரு போட்டு டீடெயில்ஸ் கேட்டு அனுப்பினார் கல்பனாவுக்கு. சிக்கலான விஷயத்தில் இருப்பதாக உதவி கேட்டார் சங்கு புஷ்பம்.

மூன்றாவது செய்தி கோமதிக்கு. இன்னைக்கு காலைல பத்து முப்பதுலேர்ந்து பத்து நாப்பதுக்குள்ள பிப்த் ப்ளோர் காரிடார் சிசிடிவி புட்டேஜ் அனுப்பும்மா.

அப்டியே பத்துமணி கிட்ட அவர் விசிட்டர் நோட்ல நேசமணின்னு பேர் எழுதுவாரு. அத ஜூம் பண்ணி எடுத்து போடும்மா”.

பர பரவென்று டைப் செய்து அனுப்பினார் சங்கு புஷ்பம்.

மூவரின் பதிலுக்கு காத்திருக்கும் வேளையில் லக்ஷ்மி அனுப்பிய வாக்காளர் லிஸ்டை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தார் சங்கு புஷ்பம். இன்னொரு பட்சி மாட்டியது.

பக்கத்துத் தெருவில் ஒரு தகுதிவாய்ந்த இல்லத்தரசி இருக்கிறார் நேசமணி என்ற பேரில்.

ரத்தினம் முன்பே இருந்த க்ளாசில் சரக்கு காலியாகி இருந்தது. நேசமணி ஒரு இருபாலர் பெயர் என்பதை அவர் கவனிக்கவில்லை.

வேட்பாளர் ஆண் என்பதால் ஆண் வாக்காளரை தேடுவதிலேயே குறியாய் இருந்திருக்கலாம்.

இதுவரை நடந்தவற்றை மகளுக்கு செய்தியாய் அனுப்பினார். பாவம் அவள். சொல்லாமல் இருந்திருக்கலாம் என நினைத்தார் சங்கு புஷ்பம்.

கணவர் பெயர், முகவரி என கிடைத்த தகவல்களை நோட் செய்து கொண்டார்.

அப்போது தான் அவருக்கு மண்டையில் அடித்தார் போல் அந்த பெயர் ஞாபகம் வந்தது. கணவர் பெயர் குமரஜோதி என இருந்தது. முகவரியும் அவர்கள் கடை இருக்கும் ஏரியா. இவர்கள் சொசைட்டிக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்பவர். நல்ல பழக்கம். குணமான மனிதர்.

சந்தேகமே இல்லாமல் சங்கு புஷ்பத்திற்கு அது கடவுள் இருக்கான் குமாரு மொமெண்ட் தான்.

டிங் என மெசேஜ் வந்தது செல்ல குமரிடமிருந்து. போனை எடுத்து முதலில் சைலண்டில் போட்டார் சங்கு புஷ்பம். ரத்தினம் நம்பர் வந்து சேர்ந்தது.

“இன்னொருத்தர் கெடச்சா ஓகேவா” எனக் கேட்டார் சங்கு புஷ்பம். “யாரு” என புருவத்தை நெளித்தார் ரத்தினம்.

“இன்னொரு நேசமணி கெடச்சா ஓகேவா” என அழுத்திக் கேட்டார் சங்கு புஷ்பம்.

“அது வந்து, இல்லியே” என இழுத்தார்.

“அட நல்லது தானே. ஆள் கூட கூட குழப்பம் கூடும்ல. இன்னும் டாக்டருக்கு ஓட்டு குறையும்ல” என ஒத்து ஊதினார் நேசப்பா.

“இல்லேங்க, இவரு ஒருத்தர் தான்” என திடமாய் சொன்னார் ரத்தினம்.

“சரி, எனக்கு தெரிஞ்சு இன்னொருத்தர் இந்த பேர்ல இருக்காங்க நம்ம ஏரியால.

உங்களுக்கு வேணும்னா சொல்லுங்க. நாங்க முடிச்சி தர்றோம்” என சப் காண்ட்ராக்ட் கேட்டார் சங்கு புஷ்பம்.

நேசப்பாவிற்க்கு குதூகலமாக இருந்தது. சங்குவிடம் ஏதோ மேட்டர் இருப்பது புரிந்தது.

இவங்க டீலிங்கே எனக்கு நா சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியம். ஒண்ணுமே இல்லாம நாலாயிரம் கோவிந்தா. மானம் மரியாதை எல்லாம் டிரௌசரால காத்துல பறக்குது. செத்து செத்து விளையாடலாம் வான்னு 

கூப்பிடுவது போல் இருந்தது ரத்தினத்திற்கு.

“இல்லேங்க நீங்க டீட்டைல் சொல்லுங்க. நா போய் பேசிக்குறேன்” என இறங்கி வந்தார் ரத்தினம்.

“நீங்க பேசினா அவங்க படிய மாட்டாங்க” என்றார் சங்கு புஷ்பம். “ஏன்?” என விரைப்பாய் கேட்டார் ரத்தினம்.

“அதான் சங்கத்து ரூல்ஸ்!” என்றார் நேசப்பா.

ரத்தினத்திற்கு காலின் கீழே பூமி இரண்டாய் பிளந்தார் போலிருந்தது.

Leave a comment