
ரத்தினம் அண்ணனை கரைத்து முடிக்கும் போது, சங்கு புஷ்பமும் நேசப்பாவின் நிலையை சுருக்கமாக குமரஜோதிக்கு செய்தியாய் அனுப்பினார்.
பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த அவர் சங்கு புஷ்பம் சொல்வதை செய்வதாக ஒத்துக்கொண்டார்.
நன்றாக சாய்ந்து ரிலாக்ஸ்டாக உட்கார்ந்தார் ரத்தினம். “சார் அண்ணன் மேற்கொண்டு ஆக வேண்டியதை பாக்க சொல்லிட்டார். ரெண்டு எல் பிக்ஸ் பண்ண சொன்னாரு” என ஒரு எல்லை ஆட்டையைப் போட்டார்.
“சரிங்க பேசி பாக்குறேன்” என போனை எடுத்தார் சங்கு புஷ்பம். ஒரு பேப்பரில் “சித்தா டாக்டர் நேசமணி நம்பர்” என கொட்டையாக எழுதி கீழே நம்பரை எழுதினார்.
“நேஸ், இந்த ஸ்கிரீன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க” என அழைப்பு விடுத்தார்.
நேசப்பா எழுந்து போய் திரையை சரி செய்தார். இது ரத்தினம் காதால் கேட்டு கண்ணால் பார்த்தது.
நேசப்பா எழுந்தவுடன் சற்றே கண்ணைக் காட்டி பேப்பரை மேஜையில் நகர்த்தி வைத்தார் சங்கு புஷ்பம். திரையை சரி செய்து திரும்பும் போது பேப்பரை கவனித்தவர் அடுத்த ஓவரை வீச ஆரம்பித்தார்.
“நம்ம சித்தா டாக்டரு உங்களுக்கு நல்ல பழக்கமா? என கொக்கியைப் போட்டார் நேசப்பா.
என் வானத்தில் வரும் வானவில்லில் ஏழு நிறமில்லை, எழுபது நிறம் என்ற ரேஞ்சில் மிதப்பமாக இருந்தார் ரத்தினம்.
“இல்லீங்க. நாங்க கட்சிக்கு ரொம்ப விசுவாசமானவங்க. மாற்று கட்சிக்காரங்க கூட தொடர்பு வச்சிக்க மாட்டோம்” என பெருமையாக சொன்னார்.
“நாங்கண்ணா யாரு” என்றார் நேசப்பா.
“நானு, அண்ணன் அப்புறம் கொஞ்சம் முக்கியஸ்தங்க எல்லாருந்தான்” என அவர் அந்தஸ்த்தை அவரே கூட்டிக்கொண்டார்.
“இல்ல பொது வாழ்க்கைல இருக்கீங்க, நாலு நல்லது கெட்டதுல சந்திப்பீங்க. அதான் நேர்ல இல்ல போன்ல பேசிக்குவீங்களா”? என நுணுக்கமான ஒரு கேள்வியை போட்டார்.
சங்கு புஷ்பம் காத்திருந்தது இந்த கேள்விக்குத் தான்.
“இல்லேங்க. போன் தொடர்பு எதுவும் கிடையாதுங்க. நேர்ல பாத்தாலும் வணக்கத்தோடு முடிச்சுக்குவோம். போன்ல நாம ஒண்ணு சொல்ல போய் அத ரெக்கார்டு பண்ணி திரிச்சி போடுறானுங்க மொள்ளமாரி பசங்க. அதனால நம்பரெல்லாம் அநாவசியமா வாங்குறதும் இல்ல குடுக்குறதும் இல்ல” என ரத்தினம் விஸ்க்கி போட்டு டீ ஆற்றினார் நேசப்பாவிடம்.
சங்கு புஷ்பம் காதில் தேனாய் பாய்ந்தது அவர் பதில். சரி கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என தைரியம் வந்தது.
கோமதியின் மெசேஜ் போனில் வர உன்னிப்பாக பார்த்தார் சங்குபுஷ்பம்.
ரத்தினம் கத்தையாக பணத்தை எடுத்து எண்ணி அதில் கொஞ்சம் சங்குபுஷ்பத்திடம் கொடுத்து ஏதோ சொல்வது தெளிவாக இருந்தது. நல்லது என எண்ணிக்கொண்டு கோமதிக்கு ஒரு நன்றியை அனுப்பினார்.
தோராயமாக அவர் ட்ரேஷரு ட்ரோவில் எவ்வளவு இருக்கும் என அந்த வீடியோவிலிருந்து தெரிந்தது.
குமரஜோதிக்கு அவசர செய்தி அனுப்பினார் சங்கு புஷ்பம்.
“நலத்திட்டம் காத்திருக்கிறது. அடையாள அட்டை நகலுடன் வரவும்” என்று.
குமரஜோதிக்கு பரவசம் தாங்கவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு விரைவாக கிளம்பினார்.
“சார் அவங்க ரெண்டு எல்லுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா ஒரு கண்டிஷன். ஒரு எல் இப்பவே தர சொல்றாங்க. ஒரு டாக்குமெண்ட் காப்பி உங்க கிட்ட இப்ப தருவாங்க” என கடையை விரித்தார் சங்கு புஷ்பம்.
“இப்போ அவ்ளோ இல்லீங்களே, ஒரு ரெண்டு நாள் கழிச்சு தரவா” என தவிர்க்கப் பார்த்தார் ரத்தினம்.
“சார் அது நமக்கு ரொம்ப ரிஸ்க்கு. அவங்களுக்கு இப்ப விஷயம் தெரிஞ்சுருச்சு. நீங்க ஒடனே தரேல்லண்ணே நேரா சித்தா டாக்டரு கிட்ட போய் நிப்பாங்க. அப்புறம் இந்த டீலுக்கு நாங்க பொறுப்பு இல்ல. அவர் இந்த பார்ட்டி எலெக்சன்ல நிக்காம இருக்க கூட குடுக்குறேனு சொன்னா என்ன பண்ணுவீங்க?” என ரத்தினத்தின் அடி வயிற்றில் ஏற்கெனவே குத்திய இடத்திற்குப் பக்கத்தில் கொஞ்சம் புளியை கரைத்தார் சங்கு புஷ்பம்.
ஜாடை மாடையாய் இவர்களும் தங்களின் கட்சி தாவும் எண்ணத்தையும், ரத்தினத்திற்க்கு அது உண்டாக்கும் அபாயத்தையம் அவர் மூளையில் திணித்தார்கள்.
செத்தாண்டா சேகரு என நிமிர்ந்து உட்கார்ந்தார் நேசமணி. மனைவியிடம் இருந்து குச்சியை இவர் வாங்கிக்கொண்டு ரிலேவில் ஓட ஆரம்பித்தார்.
இப்படி ஒரு சூழ்நிலை வரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை ரத்தினம்.
“சார் எல்லாரும் எங்கள மாதிரி இருக்க மாட்டாங்க. நாங்க டீல் முடியுற வரை ஒரு பைசா அட்வான்ஸ் வாங்க மாட்டோம். ஆனா மத்தவங்க அப்படி கிடையாது. இது ஒரு சிக்கலான விஷயம். காதும் காதும் வெச்ச மாதிரி முடிக்கணும். ரொம்ப இழுக்கக் கூடாது. விஷயம் சித்தா டாக்டருக்கு தெரிஞ்ச நெலமை நம்ம கை மீறி போய்டும்” சங்கு கரைத்த புளியில் சற்று தூக்கலாக காரத்தை கொட்டினார் நேசப்பா.
குச்சி இப்போது சங்கு புஷ்பம் கையில். “சார் இதெல்லாம் ஆரம்பிச்சா ஸ்லோ பண்ண கூடாது. எங்க டீல்ல பாதி அமௌண்ட்டுக்கு படிஞ்சிருக்கு.அதுவே உங்களுக்கு லக்கு. மார்க்கெட் இப்போ ரொம்ப ஸ்பீடு சார். சித்தாக்கு ஒரு போன அவன் போட்டா நம்ம உழைப்பெல்லாம் வேஸ்ட்டு சார்” என்றார்.
“நீங்க வேற அண்ணண் கிட்ட ரெண்டு பேர பிக்ஸ் பண்ணிட்டேன்னு சொல்லிட்டீங்க. அவரும் அமௌண்ட்டுக்கு சரினு சொல்லிட்டாரு. இப்ப நீங்க வெறும் கையோட போய் டீல் முடியலன்னு சொல்ல முடியுமா?” என இன்னொரு பாயிண்ட்டை போட்டார் நேசப்பா.
ரத்தினத்திற்கு காதில் விழுந்த சொற்களில் பாதிதான் மூளையை எட்டியிருந்தது.
மீதி காற்றில் கரைந்து கோபால் சார் வீட்டு பக்கம் போனது. திடீரென நடந்த இந்த நிகழ்வுகளை கோர்வையாக அவரால் உள் வாங்க இயலவில்லை.
“அமௌண்ட்டு கொஞ்சம் ஜாஸ்தி சார் அட்வான்ஸுக்கு. ஒரு பத்தாயிரம்னா பரவால்ல” என சொன்னார் ரத்தினம்.
“சார் அவங்க இங்கேருந்து டாக்டரு கிட்ட போனா அவரு அஞ்சு லட்சத்தை தூக்கி லட்டு மாறி குடுத்து அவங்கள ஆப் பண்ணிடுவாரு” என மீட்டரை ஏற்றினார் நேசப்பா.
யோசித்தவரை ரத்தினத்திற்கு ஒரு எல் உடனே கொடுப்பது தான் புத்திசாலித்தனம் என தோன்றியது.
“சரி சார். ஆனா நா குடுக்குறதுக்கு என்ன ப்ரூப்பு” என விளக்கமாய் கேட்டார் ரத்தினம்.
“ஒரு ப்ரூப்பும் கெடயாது. எதனா இருந்தா பின்னாடி வில்லங்கமாயிடும்” என காட்டமாக சொன்னார் சங்கு புஷ்பம்.
இந்த அம்மா பல ஜென்மமா இந்த தொழில்ல இருக்கும் போல என மலைத்துப் போனார் ரத்தினம்.
“நம்பிக்கை தான் இந்த மாதிரி டீலிங்க்ல முக்கியம். நாளைக்கு உங்கள பகச்சிக்கிட்டு இந்த ஏரியால அவங்களால நடமாட முடியுமா?” என லேசாக ரத்தினத்தின் ஈகோவை முத்தமிட்டார் நேசப்பா.
அந்த முத்தம் ரத்தினத்தை கிறக்கமாக்கியது. “அது எப்படி சார் நடமாட முடியும்? அண்ணன் நல்லவங்களுக்கு நல்லவர். கெட்டவங்களுக்கு கேடு கெட்டவர்” என பன்ச் டயலாக்கை போட்டார் ரத்தினம்.
நாம நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என யோசித்தார் நேசப்பா.
“சார் உங்களுக்கு சரினு தோணுச்சுன்னா குடுங்க, இல்லேன்னா வேணாம்” என பந்தை அவர் பக்கமே போட்டார் சங்கு புஷ்பம்.
நாலு ஆங்கிள்ல நல்லா யோசித்து கொடுக்கலாம் என முடிவெடுத்தார் ரத்தினம்.
அவரே போய் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான ரெண்டாயிரத்தையும் கொடுத்தார் சங்கு புஷ்பத்திடம்.
“மூணு பத்து வரை உங்க டைம்” என்றார் சங்கு புஷ்பம்.