
ரத்தினத்திடம் ஒரு ப்ரவுன் கலர் ஆபீஸ் கவரை நீட்டினார் சங்கு புஷ்பம்.
“இதுல ஒரு எல் போட்டு ரெடியா வைங்க. பார்ட்டி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்” என்றார்.
இந்த அம்மா எந்த வேல செஞ்சாலும் நீட்டா டைட்டா செய்யுது என சங்கு புஷ்பத்தின் விசிறியனார் ரத்தினம்.
கொஞ்ச நேரத்தில் டோர் பெல் அடித்தது. குமரஜோதி முகம் முழுதும் பிரகாசமாய் தோளில் ஒரு தண்ணீர் கேனோடு வந்தார்.
ரத்தினம் கதவு பக்கம் பார்க்க, சேரின் கைப்பிடியிலிருந்த கையை மேலே உயர்த்தி சங்கு புஷ்பத்திற்கு தம்ஸ் அப் காட்டினார் நேசப்பா.
குமரஜோதி தண்ணீர் கேனோடு வந்ததில் இருவருக்கும் பரம சந்தோஷம்.
“இவரு தான் நேசமணி வீட்டுக்காரர்” என அறிமுகப்படுத்தினார் சங்கு புஷ்பம்.
“அப்போ நேசமணி லேடியா? என குழப்பமாய் கேட்டார் ரத்தினம்.
“ஆமா சார். அவங்க வீட்ல அவங்க லேடி. எங்க வீட்ல நா லேடி” என நக்கலாய் சொன்னார் சங்கு புஷ்பம்.
வந்ததிலிருந்து அவர் தலை எத்தனை முறை சுற்றியது என்று அவருக்கே தெரியாது.
“சார், நேசமணி இருபாலர் பெயர்” என விளக்கினார் நேசப்பா.
எல்லா வில்லங்கமும் ஒரே சுருதியில் பாட்டு பாடியது.
லேடி கேண்டிடேட்டு எப்படி சரிப்படும் டாக்டருக்கு எதிராக என யோசித்தார் ரத்தினம்.
“எல்லாருக்கும் இது தெரியாது சார். எத்தன பேரு கேண்டிடேட்ட நேர்ல பாக்க போறாங்க. போஸ்டரில் வெறும் நேசமணின்னு தான இருக்கும்.” என ரத்தினத்தின் சந்தேகத்தில் சிமெண்டு பூசினார் சங்கு புஷ்பம்.
சங்கு புஷ்பம் ஒரு துண்டு சீட்டை குமரஜோதியிடம் கொடுத்தார்.
“சார் இவரு அந்த அம்மா டாக்குமெண்ட என் போனுக்கு அனுப்புவார். நீங்க அத ப்ரூப்பா வச்சிக்கலாம்” என ரத்தினத்திடம் சொன்னார் சங்கு புஷ்பம்.
குமரஜோதி டாக்குமெண்டை அனுப்பினார். சங்கு புஷ்பம் அந்த அடையாள அட்டையை பிரிண்ட் எடுத்து ரத்தினத்திடம் காண்பித்தார். ரத்தினம் சரி பார்த்த பிறகு “சார் இதை நா பைல் பண்ணி வெக்குறேன்” என திரும்ப பெற்றுக் கொண்டார்.
குமரஜோதி சங்கு புஷ்பம் கொடுத்த செய்தியை ரத்தினத்திற்கு அனுப்பினார்.
“என் மனைவிக்கு மகளிர் திட்டத்தில் நலத்தொகை பெற்றுக் கொடுத்திட தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் குமரஜோதி”.
“இவரு என்னங்க நல திட்டம்னு போட்டிருக்காரு” என்றார் ரத்தினம்.
“சார், அது கோட் வேர்ட். என் மனைவியை டம்மி வேட்பாளராக களம் காண ஒத்துக்கொள்கிறேன். அப்படின்னா அனுப்ப முடியும்?” என உரைத்தார் சங்கு புஷ்பம்.
“அவருக்கு ஒரு பதில் அனுப்பிடுங்க” என அடுத்த கட்டளையை போட்டார்.
நமக்கு இது தொழில்னா, இவங்களுக்கு இது மூச்சு காத்தா இருக்கே. இந்த அம்மா எல்லா வேலையையும் சிஸ்டமேட்டிக்கா செய்யுது என வியந்தார் ரத்தினம்.
ஆட்டோபைலட் மோடுக்கு போன ரத்தினம் குமரஜோதிக்கு சரி என பதில் போட்டார்.
நேசப்பாவும் சங்கு புஷ்பமும் ரத்தினம் என்ன மோடில் இருக்கிறார் என அறிந்து கொண்டார்கள்.
“சார் இப்போ கேண்டிடேட்டு டாக்குமெண்ட் உங்க கைக்கு வந்துருச்சி. அவங்க நீங்க சொன்ன அமௌண்ட்டுக்கு ஒத்துக்குறாங்க. மேற்கொண்டு வேல நடக்கணும்னா இப்போ நீங்க அட்வான்ஸ் தரணும் இவருக்கு.
அப்புறம் உங்க டாக்குமெண்ட் ஒண்ணு அவருக்கு ப்ரூப்பா தரணும்.” என அவரை வழி நடத்தினார் சங்கு புஷ்பம்.
“நா அடையாள அட்டை எதுவும் எடுத்திட்டு வரலீங்க” என்றார் ரத்தினம்.
“கட்சி உறுப்பினர் அட்டை எப்பவும் வெச்சு இருப்பீங்கள்ல. அது கூட போதும்” என்றார் நேசப்பா.
அவர் சொன்ன வழியில் அப்படியே நடந்தார் ரத்தினம். ரத்தினம் உறுப்பினர் அட்டையை காட்ட குமரஜோதி அதை போட்டோ எடுத்துக் கொண்டார். கவர் கை மாறியது. காரிடாரில் அல்ல, சிசிடிவி இல்லாத நடு ஹாலில்!
“தேங்க்ஸ் சார்” என வாங்கிக்கொண்டார் குமரஜோதி. “நெக்ஸ்ட் என்ன பண்ணனும்னு மேடம் கிட்ட சொல்லிடுங்க” என குஷியாக கிளம்பினார்.
குமரஜோதியை பார்சல் செய்த கையோடு திரும்ப ரத்தினத்திற்கு அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார்கள்.
நேசப்பா அஞ்சாயிரம் ருபாய் கோப்பையை இன்னும் கொஞ்சம் நிரப்பினார்.
“சார், எங்களுக்கு லஞ்ச் டைம். சீக்கிரம் முடிக்கலாம்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.
ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆன மிதப்பில் இருந்தவருக்கு சரக்கும் கொஞ்சம் மிதப்பை ஏற்றியது. சங்கு புஷ்பம் சரியானபடி ஒரு டீலிங்கை நிறைவேற்றிக் காட்டியதால் அவர் சொல் பேச்சை மறு பேச்சின்றி கேட்டார் ரத்தினம்.
சங்கு புஷ்பத்திற்கு இப்போது தான் மிக முக்கியமான கட்டம். போனை எடுத்து பார்த்தார்.
பிறகு ஒரு துண்டு சீட்டில் தகவல்களை எழுதி ரத்தினத்திடம் கொடுத்தார்.
“சார், இது இவரோட நம்பர். உங்க அண்ணன் கிட்ட சொல்லி இவரை ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்ப சொல்லுங்க. அத நாங்க அவரோட கன்பர்மேஷன் மெசேஜா எடுத்துக்குறோம் என்றார்” சங்கு புஷ்பம்.
“என்ன மேடம், சார் தோக்க போறார். அவருக்கு எதுக்கு வாழ்த்து சொல்லணும்” என மூளையை கசக்கி பிழிந்து ஒரு உருப்படியான கேள்வியை கேட்டார் ரத்தினம்.
“கரெக்ட் சார். நீங்க ஒடம்பு முடியாதவங்க யாரையாவது போய் ஆஸ்பத்திரில பாத்தா என்ன சொல்லுவீங்க? சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வந்து உங்க பேரன் பேத்தி கல்யாணத்த பார்ப்பீங்கனு சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுவீங்களா, இல்ல நாளைக்கே போய் சேந்துடுவீங்க. இன்னைக்குள்ள இந்த ஆப்பிளை சாப்ட்ருங்கன்னு சொல்லுவீங்களா? என நறுக்கென்று கேட்டார் சங்கு புஷ்பம்.
“அண்ணே, ஒரு பார்ட்டி பிக்ஸ் ஆகிட்டு. அட்வான்ஸ் வாங்கிட்டு டாக்குமெண்ட் காபி கொடுத்துட்டாங்க.
இன்னொரு பார்ட்டியும் ஓகே சொல்றாங்க. நீங்க ஆசீர்வாதம் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்பிட்டேங்கன்னா டீல் முடிஞ்சுடும்ணே” என உற்சாகமாய் சொன்னார் ரத்தினம்.
“நல்லது ரத்தினம். போன அவங்ககிட்ட குடு. பேசிடறேன்” என்றார் அண்ணன்.
“இல்லண்ணே, அவங்க மெசேஜா அனுப்ப சொல்றாங்க. சும்மா உங்க சைட்லேர்ந்து ஒரு கன்பர்மேஷன்க்கு. மத்தபடி தங்கமான பார்ட்டின்னே” என அவரை சரி காட்டினார் ரத்தினம்.
சங்கு புஷ்பம் அவர் போனையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
அண்ணனுக்கு ஒரு சிக்கல். போன் அவ்வளவாய் உபயோகிப்பதில்லை எழுத. பேசுவதோடு சரி. அதை பெரிதாய் நோண்டுவதில் ஆர்வம் இல்லாதவர். இவன் வேற மெசேஜ் அனுப்ப சொல்றான் என்ன பண்றது என யோசித்தார்.
வெளியே காத்திருந்த ஆட்களை எட்டிப் பார்த்தார். ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் இருந்தார்.
“தம்பி இங்க வாப்பா” என கூப்பிட்டு “இவரு போன்ல ஏதோ வாழ்த்து அனுப்ப சொல்றாரு. என்னனு கேட்டு அனுப்பிடு” என்றார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் துண்டு சீட்டில் எழுதியிருந்த வாழ்த்து அட்சர சுத்தம் பிசகாமல் அண்ணண் போனிலிருந்து போய் சேர்ந்தது சித்தா டாக்டர் நேசமணிக்கு.
“அருமை நண்பர் நேசமணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தாங்கள் இந்த தேர்தலில் அமோக வெற்றியடைய என்னுடைய ஆசீர்வாதங்கள். என் அன்புத் தம்பி இரத்தினமுத்து சேகர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வார். என்றும் மாறா நட்புடன் உங்கள் அண்ணண்”.
“அண்ணண் வாழ்த்து அனுப்புறாரு மேடம்” என்றார் ரத்தினம் லைனில் இருந்தபடியே.
சங்கு புஷ்பத்திற்கும் நேசப்பாவிற்கும் மூச்சு நிற்பது போல இருந்தது.
“அனுப்பிட்டாருங்க. இப்ப உங்களுக்கு ஓகே வா” என சிரித்தார் ரத்தினம்.
“சார் இன்னொரு லாஸ்ட் ஸ்டெப் பண்ணிடுங்க” என சொன்னார் சங்கு புஷ்பம்.
நேசப்பா ரத்தினம் முன் இருந்த கோப்பையை நிரப்ப ஆரம்பித்தார். ரத்தினம் அதை காதலாய் பார்க்கும் பொது இன்னொரு துண்டு சீட்டை கொடுத்தார் சங்கு புஷ்பம்.
“இவரு எங்க லாயர். எங்க எல்லா டீலிங்க்லயும் அவரு இருப்பாரு. இப்போ அண்ணன் சார்பா நீங்க டீல் பண்றீங்க. அதனால இவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.
அவரின் ஒரு கையில் அப்போது கோப்பை இருந்தது. லாஸ்ட் ஓவர் வேறு. ஆல்ரெடி மேட்ச ஜெயிச்சாச்சு. இன்னும் ஏன் கவலைப்படணும் என்று நினைத்தார் ரத்தினம்.
“இந்தாங்க மேடம். நீங்களே அனுப்பிடுங்க” என அவர் போனை கொடுத்தார் ரத்தினம்.
நேசப்பா கோபால் சாருக்கு மனதார நன்றி சொன்னார். சங்கு புஷ்பம் சுறுசுறுப்பாக எழுத ஆரம்பித்தார்.
“அன்பு அண்ணன் சார்பாக உங்கள் கட்சிக்காக நங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். சகோதரர் நேசமணியின் வார்டு கவுன்சிலர் தேர்தல் வெற்றிக்காக நான் மற்றும் அண்ணண் எல்லா உதவிகளையும் செய்து தருவோம் என மனதார உறுதி மொழிகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதங்கள் அவருக்கு கிடைக்க மனதார பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு ரத்தினமுத்து சேகர்.
அடுத்த நொடி அது சித்தா டாக்டர் நேசமணியின் இரண்டாவது போனுக்கு போய் சேர்ந்தது. ஆனால் ஒரு டிக்கிலேயே இருந்தது.
அப்பாடா என்றிருந்தது சங்கு புஷ்பத்திற்க்கு.
“இந்தாங்க சார். லாயருக்கு அனுப்பிட்டேன்” என போனை திரும்ப கொடுத்தார் சங்கு புஷ்பம்.
“மேடம் ரொம்ப பாஸ்ட்டா வேல பாக்குறாங்க சார்” என மனம் விட்டு பாராட்டினார் ரத்தினம்.
இதற்கு மேல் இவர் இங்கே தேவையில்லை என நினைத்தார் சங்கு புஷ்பம்.
“சரிங்க சார். நீங்க நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க” என சொல்லி ரத்தினத்தை வழியனுப்பி வைத்தனர் இருவரும்.