Tamil novel – OTP – Part 19/20

A political meeting with large group of people

ரத்தினம் கிளம்பியதும் கதவை சாத்தியவர்கள் ஆளுக்கொரு பாத் ரூமிற்க்கு ஓடினார்கள். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பசியையும் இயற்கை உபாதைகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

பாத்ரூம் போய் வந்த பிறகு ஆயாசமாக உணர்ந்தார்கள். பேருக்கு நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டார்கள். ரத்தினம் கிளம்பி விட்டதால் இனி போன் பேசலாம் என உணர்ந்தார்கள்.

ரெஸ்ட் எடுக்க சங்கு புஷ்பத்திற்க்கு நேரமில்லை. லக்ஷ்மிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்லி இனி என்ன செய்யலாம் என திட்டமிட்டார்.

லக்ஷ்மிக்கு நேரில் போய் அவர்களை கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

முன்பின் தெரியாத ஒருவர் தங்களை சந்திக்க வருகிறார் என்றபொழுது அவர்களின் நிதானமும் எச்சரிக்கை உணர்வும் பிரமிப்பாக இருந்தது.

அந்நிய ஆட்களை கணித்து அவர்களிடம் எவ்வளவு எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று லக்ஷ்மியும் கற்றுக் கொண்டார்.

அடுத்த போன் கல்பனாவுக்கு போட்டார் சங்கு புஷ்பம்.

கல்பனாவின் உறவினர் ரத்தினம் கட்சியில் உள்ள முக்கியஸ்தருக்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர். அவர் போய் ஓத வேண்டிய இடத்தில் ஓதி விட்டார்.

வார்டு பெயரை சொல்லி “சார், இங்க கட்சி ஆளுங்க எலெக்சன்ல டபுள் கேம் ஆடுறாங்கன்னு லோக்கல் சோர்ஸ் டிப் குடுத்திருக்காங்க சார். எக்ஸ் எம்எல்ஏ அண்ட் அஸோஸியேட் இன்வால்வ்ட் சார். ஒடனே நீங்க அவங்க ஏரியா ஸ்டேஷனை அலெர்ட் பண்ணீங்கன்னா கையும் களவுமா பிடிக்கலாம் சார்” என சொல்லி முடித்தார்.

“ரொம்ப டயர்டா இருக்க. போய் கொஞ்ச நேரம் தூங்கு” என்றார் நேசப்பா.

“இன்னும் கொஞ்சம் வேல பாக்கி இருக்கு. இது பத்தாது” என்றார் சங்கு புஷ்பம்.

“அவர் தான் போய்ட்டாரே” என்றார் நேசப்பா.

“நேசமணி பைல் தானே முடிஞ்சிருக்கு. இன்னும் நம்ம புஷ்பா பைலை ஓப்பனே பண்ணலையே. நீங்க போய் படுங்க. நா கொஞ்சம் நிதானமா யோசிக்கிறேன்.” என்றபடி சிரித்தார் சங்கு புஷ்பம்.

தலைமை வரை விஷயம் இன்று இரவுக்குள் போய்விடும் என கல்பனா தகவல் சொன்னார்.

கல்பனா வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு சங்கு புஷ்பத்தை சந்திப்பதாக சொன்னார்.

லக்ஷ்மி அனுப்பிய புஷ்பா பெயர்கள் கொண்ட லிஸ்டை எடுத்துக் பார்த்தார்.

வாக்காளர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், முகவரி மற்றும் பாலினம் இருந்தது. சங்கு புஷ்பத்திற்கு இது போதாது என்று தோன்றியது. ஆனால் இன்னும் என்ன தேவை என தெரியவில்லை.

சற்று யோசனைக்கு பிறகு இவர்களின் போன் நம்பர் கிடைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என நினைத்தார். அதை எப்படி சேகரிப்பது என யோசித்தார்.

அவர் சிஸ்டம் டேபிள் மீது இருந்த பஞ்சாமிர்த பாட்டில் அவர் கேள்விக்கான விடையை தந்தது.

வள்ளியப்பனுக்கு போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சார் ஒரு ஹெல்ப் வேணும்” என ஆரம்பித்தார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம்” என்றார் அவர்.

வள்ளியப்பனின் மகன் இவர்கள் ஏரியாவில் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். அவரிடம் சந்தாதாரர் முகரியும், போன் நம்பரும் இருக்கும். காலையில் நடந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி முடித்தார் சங்கு புஷ்பம்.

வாயடைத்துப் போனார் வள்ளியப்பன். “நீங்க கவலைப்படாதீங்க மேடம். அரை மணி நேரத்தில் அவன் உங்களுக்கு அனுப்பிடுவான். ஆள், படை பலம் எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் இருக்குமா என்ன? நம்மள மாதிரி சாதாரண ஜனங்களும் லேசு பட்டவங்க இல்லன்னு அவங்களுக்கு புரியணும்” என பொரிந்து தள்ளினார் வள்ளியப்பன்.

சற்று நேரத்தில் வள்ளியப்பன் மகன் தணிகையிடம் இருந்து எல்லா போன் நம்பர்களும் கிடைத்தது.

இப்போது சங்கு புஷ்பத்துக்கு ஐடியா வந்தது. அந்த லிஸ்ட்டை லக்ஷ்மிக்கு அனுப்பி விட்டு போன் போட்டார்.

“லக்ஷ்மி, லிஸ்ட்ல ஒவ்வொருத்தருக்கும் ஒரு தொகை போடு. புரியுதா? என்றார் சங்கு புஷ்பம்.

“பக்காவா போட்டு தரேன்” என்றார் லக்ஷ்மி.

புஷ்பா பெயர் காம்பினேஷனில் பதினெட்டு பேர் இருந்தார்கள் லிஸ்டில். 

முதலில் ரேண்டமாக ஆறு பேருக்கு விருப்பமில்லை என தொகையின் கீழே போட்டார்.

லிஸ்டில் இருந்து சங்கு புஷ்பத்தையும் கனக புஷ்பத்தையும் நீக்கி விட்டார்.

மீதி இருந்த பத்து பேருக்கு குறைந்தது ஒரு எல்லில் இருந்து நான்கு எல் வரை பதிவிட்டார்.

மொத்தம் கூட்டினால் இருபத்து மூன்று எல் வந்தது. நல்ல தொகையாக இருந்தது.

ஆனால் பத்து பேர் என்பது கொஞ்சம் அதிகமாகப்பட்டது.

அதிகபட்சம் ஐந்து பேர் வரை போன தேர்தலில் டம்மி வேட்பாளராக இருந்தார்கள்.

அதனால் ஐந்து பேர் வரை இருக்கட்டும் என முடிவுக்கு வந்தார்.

கடைசியாக அண்ணி புஷ்பாவைத் தவிர்த்து ஐந்து பெண் புஷ்பங்களுக்கு நல்ல தொகையைப் போட்டு முடித்தார். மொத்தம் பதினைந்து எல். பாரபட்சமின்றி

தலைக்கு மூணு எல். என்ஜாய் பண்ணுங்க என நினைத்துக் கொண்டு அம்மாவுக்கு அனுப்பினார்.

சங்கு புஷ்பத்திற்கு அந்த லிஸ்ட் திருப்தியாக இருந்தது.

போன் அடித்தது. குமரஜோதி. “மேடம் அந்த கவர்ல அவ்ளோ பணம் இருக்கு மேடம்” என்றார்.

“எல்லாம் உங்களுக்கு தான். சாயந்திரம் நானும் அவரும் வந்து உங்களை பாத்து நேர்ல பேசுறோம். நீங்க ரத்தினத்தோட கட்சி அட்டையை எனக்கு அனுப்புங்க” என்றார் சங்கு புஷ்பம்.

லக்ஷ்மி அனுப்பிய லிஸ்டையும் ரத்தினத்தின் கட்சி அட்டையையும் பிரிண்ட் எடுத்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

தலை வலி ஆரம்பமானது சங்கு புஷ்பத்திற்கு. ஆனால் செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தது.

கிச்சனுக்கு போய் காபி போட்டு கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தார். ரத்தினத்திடம் இருந்து வாங்கிய கன்சல்டேஷன் பணம் வேறு இருக்கிறது. அந்த பணத்தை சொந்த செலவுக்கு தொடக்கூடாது என தோன்றியது.

காபி போட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி குடித்தார். பக்கத்தில் அபார்ட்மெண்ட் கட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வேலை முடித்து எல்லோரும் கிளம்பி கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வந்த ஒருவர் அவர்களுக்கு பணம் கொடுப்பதை பார்த்தார். அந்த நாளின் சம்பளமாய் இருக்கும் என நினைத்தார். கூட்டமாக இருந்தவர்களுக்கு அவர் பணம் விநியோகம் செய்தது சங்கு புஷ்பத்திற்கு ஒரு அட்டகாசமான ஐடியாவை கொடுத்தது.

அவரின் தலைவலி பறந்து ரத்தினம் வீட்டு பக்கம் போனது.

வள்ளியப்பனுக்கு திரும்ப போன் போட்டார் சங்கு புஷ்பம்.

“சொல்லுங்க மேடம். லிஸ்ட் அனுப்பிட்டானா” என்றார்.

“தேங்க்ஸ் சார். வந்துடிச்சி. இன்னொரு ஹெல்ப் வேணும். என்கிட்ட எட்டாயிரம் ரூபா இருக்கு. அதுக்கு நூறு ரூபா கட்டா வேணும். உங்க கடைல இருக்குங்களா?” என்றார் சங்கு புஷ்பம்.

“இருக்கு மேடம். குமார் கிட்ட குடுத்தனுப்பவா” என்றார் வள்ளியப்பன்.

“சரிங்க சார். அப்டியே மொய் கவர் ஒரு கட்டு குடுத்து விடுங்க. அத எங்க லிஸ்ட் அமௌண்ட்ல சேத்து போட்டுடுங்க” என்றார் சங்கு புஷ்பம்.

“சரிங்க அனுப்புறேன்” என வைத்தார் வள்ளியப்பன்.

சங்கு புஷ்பம் பேசிக்கொண்டிருக்கும்போது எழுந்து வந்தார் நேசப்பா.

நடந்தவற்றை சொல்லி காபி கொடுத்தார் சங்கு புஷ்பம்.

“அம்மாவும் பொண்ணும் அட்டகாசமா வேலை செய்றீங்க” என புகழ்ந்து தள்ளினார் நேசப்பா.

சங்கு புஷ்பம் அன்றைய லோக்கல் செய்தித்தாளை புரட்டினார். அவர் தேடிய செய்தி அதில் இருந்தது.

இரவு ஏழு மணிக்கு ரத்தினம் கட்சியின் கூட்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில்.

நேசப்பாவை கடைக்கு அனுப்பி விட்டு இரவு உணவை தயாரிக்க ஆரம்பித்தார்.

குமார் வந்து நூறு ருபாய் தாள்களாக பணத்தையம், மொய் கவர்களையும் கொடுத்துவிட்டு போனார்.

சங்கு புஷ்பம் கிளை பெயரோடு சேர்த்து “ரத்தினமுத்துசேகர்” என டைப்படித்து பிரிண்ட் எடுத்தார்.

அதை கட் செய்து மொய் கவர்கள் மீது ஒட்டி ஒவ்வொரு கவரிலும் நூறு ருபாய் போட்டார்.

எட்டாயிரமும் மொய் கவர்களில் போட்டு இரண்டு பிரிவாக பிரித்து வைத்தார்.

பிறகு அதனுடன் லக்ஷ்மியின் லிஸ்டையும் ரத்தினத்தின் அடையாள அட்டை நகலையும் சற்று கசக்கி போட்டார்.

நேசப்பா ரத்தினம் கட்சியின் வேட்டி சேலையை பஜாரிலிருந்து வாங்கி வந்தார்.

“எல்லாம் ரெடிங்க” என காண்பித்தார் சங்கு புஷ்பம். மலைத்துப் போனார் நேசப்பா.

“என் கெரகம். இதையெல்லாம் கட்ட வேண்டியிருக்கு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“பேன்சி டிரஸ் காம்படிஷனுக்கு போறதா நெனச்சு கட்டிக்கோ” என ஜாலி மூடில் சொன்னார் நேசப்பா.

“நக்கலா. காலைல நாக்கு வெளில தள்ளி போற மாதிரி இருந்தீங்க” என அவர் பங்குக்கு வாரினார் சங்கு புஷ்பம்.

பஞ்சாமிர்த பாட்டிலில் இருந்து கொஞ்சம் எடுத்து கல்பனாவுக்காக ஒரு டப்பாவில் எடுத்து வைத்தார்.

கரன்சி கவரை ஆளுக்கு பாதியாய் பிரித்துக் கொண்டார்கள். மிச்சமிருந்த பஞ்சாமிர்த பாட்டிலையும் கவர்களையும் இரண்டு துணிப் பைகளில் போட்டு வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.

நேராக வள்ளியப்பனின் கடைக்கு போய் தணிகையிடம் பேப்பர்களை கொடுத்து என்ன செய்ய வேண்டும் என சொன்னார்கள்.

இரவு ஏழு மணி. கட்சி கூட்டம் ஆரம்பமாக இன்னும் நேரம் இருந்தது. ஆண்கள் பக்கம் நேசப்பாவும், பெண்கள் பக்கம் சங்கு புஷ்பமும் கூட்டத்தில் கலந்தார்கள்.

சற்று நேரம் கழித்து அண்ணனும், அண்ணியும், ரத்தினமும் மேடையில் ஏறினார்கள். மூவரும் உற்சாகமாக இருந்தார்கள். நேசப்பா தணிக்கைக்கு மெசேஜ் செய்தார். “மணி கூண்டு பக்கத்தில் இருக்கிறேன் என்று”.

கடைசி லைனில் உட்கார்ந்திருந்தார். தணிகை கொஞ்ச நேரத்தில் வந்து நேசப்பா அருகில் நின்றார்.

பிறகு மேடையை சற்று நேரம் பார்த்து விட்டு பக்கத்தில் இருந்த கட்சிக்காரரிடம் பேப்பரை கொடுத்தார்.

“அண்ணே, அதோ மேடைல அண்ணன் பக்கத்துல ஒருத்தர் இருக்காருல்ல. அவர் இந்த பேப்பரை எங்க கடைல ஜெராக்ஸ் எடுத்தாரு. காச குடுத்துட்டு இதை விட்டுட்டு வந்துட்டாரு. அவர்கிட்ட குடுத்துடுங்கண்ணா. கடைல ஆள் இல்ல நா போறேன்” என பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி போனார்.

அவர் அந்த பேப்பரை படித்துப் பார்த்தார். பதினைந்து எல் ஐந்து புஷ்பங்களுக்கு இருந்தது. இன்னொரு பேப்பரில் ரத்தினத்தின் அடையாள அட்டை இருந்தது.

அவர் ஏதோ யோசித்தவராக நிற்க நேசப்பா அவரிடம் இருந்து அந்த பேப்பரை வாங்கி சற்று சத்தமாக படித்தார்.

“நம்ம ரத்தினம் தம்பி தான் அண்ணிக்கு எதிரா அஞ்சு புஸ்பாவை நிறுத்துது போல” என கொளுத்திப் போட்டார். முகம் சுண்டிப் போனார் கட்சிக்காரர்.

“மொத்தம் பதினைந்து எல். ஒவ்வொரு புஸ்பாக்கும் பத்தாயிரம் குடுத்துட்டு மிச்சத்தை இவரு எடுத்துக்குவாரு” என விளக்க உரையை கொடுத்தார்.

“அடப்பாவி, சொந்த கட்சிக்கே துரோகம் பண்ணுறானே” என கோபமானார் அவர்.

பிறகு “அவருக்கு ஏது அவ்வளவு பணம்?” என சந்தேகமாய் கேட்டார்.

அவர் காதருகே போய் “இவரு சித்தா டாக்டரு ஆளு. அவரு தான் இவருக்கு பேங்கர். அண்ணன் கூடவே இருந்து கழுத்தறுக்குறான்” என டீடைலை சொன்னார்.

பேயறைந்தார் போல ஆனார் அவர். அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆண்கள் பகுதியில் பெரும்பாலும் எல்லாருக்கும் அரசால் புரசலாக போய் சேர்ந்தது.

இந்த பக்கம் சங்கு புஷ்பம் உற்சாகமாக சக பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

நேசப்பா அந்த பக்கம் போய் போனில் இந்த கதையை யாரிடமோ விளக்கினார்.

அதை கேட்ட இரு பெண்கள் பேச சங்கு புஷ்பம் கூட சேர்ந்து கொண்டார்.

“ஆமா, ரத்தினம் டாக்டரோட ஸ்லீப்பர் செல்னு மகளிர் அணி தலைவி பேசிக்கிறாங்க. டாக்டரு சம்சாரமும் தலைவியும் ஒரே ஜிம்முக்கு தான் போறாங்க. அப்போ அந்த அம்மாகிட்ட இவரு போய் பேசிட்டு வந்திருக்காரு. புஷ்பா அண்ணிக்கு எதிரா அஞ்சு பேர ரெடி பண்றாரு. ஆனா இங்க நல்லவரு மாதிரி அவங்க கூட மேடைல உக்காந்திருக்காரு” என டிவி சேனல் டிபேட் போல பேசி முடித்தார்.

சொல்லவே வேண்டாம். பெண்கள் பக்கம் அதி விரைவாக அந்த செய்தி பரவியது.

நேசப்பா அவர் துணி பையை வைத்து விட்டு கிளம்பினார்.

கேட்பாரற்று கிடந்த பையை எடுத்த ஒருவர் அதிலிருந்த கவர்களை பார்த்து யோசித்தார்.

கவரை வாங்கிய சங்கு புஷ்பம், “ரத்தினம் தம்பி தான் எல்லாருக்கும் நூறு ரூபா ஓட்டுக்கு இப்பயே காசு குடுக்குது” என சொன்னார்.

பஞ்சாமிர்த டப்பாவையும் ஸ்பூன்களையும் பக்கத்தில் இருந்த பெண்கள் டீமிடம் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

இரண்டே நிமிடத்தில் விநியோகம் முடிய தூரத்தில் இருந்து வீடியோ எடுத்தார் லோக்கல் பேப்பர் நிருபர்.

இதே போன்று சற்று தள்ளி சங்கு புஷ்பம் பையை வைத்து விட்டு நகர கூட்டம் பரபரப்பாக இருந்தது.

Leave a comment