Tamil novel – OTP – Part 20/20

A senior citizen couple meeting their friend

கூட்டத்தில் இருந்து கிளம்பியவர்கள் குமரஜோதியை வள்ளியப்பன் கடையருகே வர சொன்னார்கள்.

அங்கு இருந்த பஸ் ஸ்டாப் காலியாக இருந்தது. அவரிடம் விவரம் சொல்லி அந்த பணத்தை அவரையே வைத்துக் கொள்ள சொன்னார்கள். அவரின் உதவிக்கு நன்றி சொல்லி யார் வந்து கேட்டாலும் அவர் எதுவும் தரவில்லை. நான் தண்ணீர் கேன் போட்டுவிட்டு வந்து விட்டேன் என சொல்லுமாறு அறிவுறுத்தி கிளம்பினார்கள்.

வீட்டுக்கு போய் உடை மாற்றி செல்லகுமாருக்கு நன்றி சொல்லி இருவரும் போய் பார்க்கில் உட்கார்ந்தார்கள். கல்பனா வந்தார். மொத்த கதையையும் கூர்ந்து கேட்டார்.

விஷயம் தலைமை வரை சென்று சேர்ந்ததை இவர்களிடம் சொன்னார். பி

றகு சற்று யோசித்த கல்பனா “இந்நேரம் லோக்கல் ஸ்டேஷன்க்கு மெசேஜ் வந்திருக்கும். இந்த மாதிரி சென்சிடிவ் மேட்டர் எல்லாம் குமரகுரு சார் தான் விசாரிப்பார். ரத்தினத்தை விசாரிச்சு அவர் உங்க பேர சொன்னா இங்க வர வாய்ப்பு இருக்கு. நாம தயாரா இருக்கணும்” என்றார்.

மூன்று பேரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்கள். பிறகு கல்பனா சில யோசனைகளை சொல்லி நான் பார்த்துக்கிறேன் என தைரியம் சொன்னார்.

செல்லகுமாரை போய் பார்த்தார் கல்பனா. யாராவது நேசமணி பற்றி விசாரிக்க வந்தால் தனக்கு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தினார். பிறகு அவர்களிடம் என்ன கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல வேண்டும் என சொல்லி புரிய வைத்தார். அதையே சங்கு புஷ்பத்திற்கும் சொன்னார். அந்த இரவு சம்பந்தப்பட்ட அனைவருக்கும்ஒரு நெடிய இரவாக இருந்தது.

எம்பி அவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர் நம்பவில்லை. பிறகு “சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் பண்ண சொல்லுங்க. அப்புறம் பார்க்கலாம். நாளைக்குள்ள என்ன நிலவரம்னு சொல்லுங்க. ஏதாவது பிரச்சினை இருந்தா கேண்டிடேட்டை மாத்திடலாம்” என்றார் அவர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் அண்ணணும் ரத்தினமும் ஆளும் கட்சி வேட்பாளர் நேசமணிக்கு வாழ்த்தும் ஒத்துழைப்பும் தருவதாக உளமார சொன்னது ஆதாரத்தோடு தலைமைக்கு சென்றது.

இங்கே லோக்கலில் புகைச்சல் அதிகமானது. அண்ணன் காதுக்கு வந்த செய்தி எதுவும் நல்ல செய்தி இல்லை.

ரத்தினத்திடம் டம்மி வேட்பாளராக அறியப்பட்ட நேசமணிகளின் டாக்குமெண்ட்டை கேட்டார். அவரிடம் எதுவும் இல்லை. பணம் எங்கே என்றார். தண்ணீர் கேன்காரருக்கு கொடுத்ததாக சொன்னார் ரத்தினம். எதுவும் நம்பம் படியாக இல்லை அவருக்கு.

அப்போது அவருக்கு ஒரு செய்தி வந்தது. புஷ்பா லிஸ்ட் வித் ரத்தினம் ஐடி கார்டு.

“இதெல்லாம் என்ன” என கண் சிவந்தார் அண்ணன். எதற்கும் பதில் இல்லை ரத்தினத்திடம்.

காலையில் லேசாய் சுற்றிய அவரின் தலை இப்போது பம்பரமாய் சுற்றியது.

குமரகுரு ரத்தினத்தை விசாரித்தார். அவர்கள் இருவரின் போன் ரெக்கார்டுகளை எடுத்தார்.

இருவரும் டாக்டர் நேசமணிக்கு செய்தி அனுப்பியது சிக்கியது.

ரத்தினத்தின் கதைப்படி குமரகுரு நேசப்பாவை விசாரிக்க கிளம்பினார்.

“நேசமணி எந்த பிளாட்? என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

செல்ல குமார் பிளாட் நம்பர் சொன்னார். விசிட்டர் பைல் செக் செய்தார்.

ரத்தினம் வந்தது நோட்டில் இருந்தது. ஐந்து மணி நேரத்திர்ற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். என்னவாக இருக்கும் என யோசித்தார்.

“அவங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்க? என்ன பண்றங்க” என்றார் குமரகுரு செல்லகுமாரிடம்.

“சார் அவங்க ரெண்டு பேரு மட்டும் தான் வீட்ல. ரிட்டையர்டு ஆனவங்க. சார் போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். அந்த அம்மா நர்ஸு” என்றார் செல்ல குமார்.

“நீங்க தான் நைட் ஷிப்டா” என்றார் குமரகுரு.

“இல்ல சார். வேற ஒருத்தர் வரணும். அவரு வெளியூரு. அங்க ஒரு டெத்து. அவரு வரல. அதன் நா இருக்கேன்”. என்றார் செல்லகுமார்.

“எந்த ஊரு” என்றார் குமரகுரு.

செல்ல குமார் சொன்னார். “சார், உங்க ஊர்ல ஒரு டெத்தா இன்னைக்கு” என ஊர் தலைவரை விசாரித்தார். அவர் ஆமாம் என்று சொல்ல செல்லகுமாரை நம்ப ஆரம்பித்தார் குமரகுரு.

“ரிட்டையர்டு ஆயிட்டு இப்போ என்ன பண்றாங்க?” என்றார் குமரகுரு.

“அந்த அம்மா லைப் கோச் சார். வர்றவங்க மணி கணக்குல பேசுவாங்க. அவரு வயசானவரு. ரெண்டு பேருக்கும் சுகர். அவங்க பசங்க ரெண்டு பேரு பாரின்ல இருக்காங்க. ஒரு பொண்ணு ப்ரொபஸரா பாண்டில இருக்காங்க. அவங்க மட்டும் வாரா வாரம் வந்து பாத்துட்டு போவாங்க. ரொம்ப டீசண்டான பேமிலி சார்” என்றார் செல்ல குமார்.

இவங்க பேக்கிரௌண்ட் கவுரவமா இருக்கு. ரத்தினம் சொன்னதை சந்தேகப்பட்டார் குமரகுரு.

“சிசிடிவி இருக்கா?” என்றார் குமரகுரு.

“எல்லா ப்ளாக்லயும் இருக்கு சார்” என்றார் செல்ல குமார்.

“சரி, நைட் ஷிப்ட் கிட்ட சொல்லி வைங்க. நா போகும் போது பார்த்துட்டு போறேன்” என்றார்.

“அவங்க வீட்டுக்கு தண்ணீர் கேன் வந்துதா? எப்போ” என அதையும் சேர்த்து கேட்டார்.

“ஆமா சார். மத்தியானம் வந்தார். போட்டுட்டு கொஞ்ச நேரத்துல போயிட்டாரு.

இருங்க நோட்ல பாக்குறேன்” என்றார் செல்லகுமார்.

“இந்த பையன் சிஸ்டமேடிக்கா இருக்கான்” என நல்ல அபிப்ராயம் வந்தது குமரகுருவுக்கு.

“சார் மொத்தம் பத்து நிமிஷம் தான் சார்” என்றார் செல்லகுமார்.

“சரி” என சொல்லி உள்ளே கிளம்பினார்.

செல்ல குமார் பக்கத்தில் இருந்த நைட் வாட்சமேனை பார்க்க அவர் போனை எடுத்துக் கொண்டு பாத்ரூம் பக்கம் போனார். கல்பனாவுக்கு மெசேஜ் வந்தது.

அவர் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு கீழே நாயை கூட்டிக்கொண்டு இறங்கி வந்தார்.

“மேடம் நீங்க இங்க தான் இருக்கீங்களா” என்றார் குமரகுரு.

கல்பனா திரும்பி “நீங்க எங்க சார் இங்க? அதுவும் ராத்திரில. நா இந்த பிளாக்ல தான் இருக்கேன்” என்றார்.

“நல்லதா போச்சுங்க. இங்க ஜி பிளாக் நேசமணிய தெரியும்களா” என்றார் குமரகுரு.

“அவங்கள தெரியாதவங்க ரொம்ப கம்மி சார் இந்த காம்பௌண்ட்ல. என்ன சார் விஷயம்?” என்றார் கல்பனா.

சுருக்கமாக கதையை சொன்னார் குமரகுரு.

“என்ன சார் இது. எங்க காம்பௌண்ட்லயே இந்த மாறி ஒரு அட்டெம்ப்ட்டா? எல்லாரும் பச்சவங்க, நல்ல பொசிஷன்ல இருக்கவங்க” என்றார் கல்பனா.

“ஆமாங்க, எனக்கும் அப்டி தான் தோணுது. மூணு நாலு லட்சம்லாம் இங்க இருக்குறவருக்கு ஒரு மேட்டரே கிடையாது. அந்த அமௌண்ட்டுக்கு மானம் மரியாதையை யாரு அடகு வெப்பாங்க?” என கேட்டார் குமரகுரு.

“சார் எதுக்கும் நாம சிசிடிவி ஒரு தரவ பாத்துட்டு முடிவு பண்ணலாம். வாங்க” என ஆபீஸ் ரூம் பக்கம் போனார்கள்.

ரத்தினம் ரிஷப்சனில் காத்திருந்தது, செல்ல குமார் போன் பேசியது, பிப்த் ப்ளோர் காரிடரில் நடந்த உரையாடல், அவர் சங்கு புஷ்பத்துக்கு காசு கொடுத்தது, பிறகு அவர் வெய்ட் பண்ணி உள்ளே போனது என எல்லாம் இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து காபி வந்தது. பிறகு தண்ணீர் கேன் வந்தது. அவர் உள்ளே போய் சில நிமிடங்களில் வெளியே வந்து விட்டார். சில்லறை காசு வாங்கும் நேரம் தான். பிறகு ரத்தினம் கிளம்பி வெளியே போகிறார்.

“சார் இதுல ஏதாவது உங்களுக்கு பொறி தட்டுதா” என்றார் கல்பனா.

“வித்தியாசமா எதுவும் இல்ல. அந்த அம்மா ஏதோ ஸ்ட்ரிக்டா சொல்றாங்க. அவரு அப்புறம் தன் காசு தராரு. மொதல்ல அந்த அம்மா அவரை உள்ளேயே கூப்புடலை. வெளில சேர போட்டு உக்கார சொல்ராங்க. இந்த மாறி டீலிங்க்ல இருக்கவுங்க வெளிப்படையா இருக்க மாட்டாங்க. அப்புறம் காசு தந்தப்புறமும் அந்த அம்மா உடனே உள்ள விடல” என யோசித்தார் குமரகுரு.

“சரி சார். வீட்டுக்கு வாங்க பேசலாம்” என அழைத்துப் போனார் கல்பனா.

“இந்தாங்க சார் பஞ்சாமிர்தம்” என உபசரித்தார் கல்பனா.

“இப்ப எப்படி ப்ரோசீட் பண்றது? என குழம்பினார் குமரகுரு.

“அவங்கள விசாரிக்கணும். ஆனா தொந்தரவா இருக்க கூடாது. இது தப்பான புகாரா இருந்தா வயசானவங்க அவங்க வருத்தப்படுவாங்க” என உண்மையாக கரிசனப்பட்டார் குமரகுரு.

இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும் என அமைதியாய் இருந்தார் கல்பனா.

ஸ்டேஷனில் இருந்து போன் வந்தது குமரகுருவுக்கு. தலைமைக்கு இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட் வேணும் என.

“மேடம் அவங்க உங்களுக்கு பழக்கமா? கொஞ்சம் போன்ல கேஷுவலா பேசி பாருங்களேன்” என உதவி கேட்டார் குமரகுரு. கல்பனா போனை போட்டார்.

‘என்ன ஆன்ட்டி இன்னைக்கு எப்படி போச்சு? தூங்குற நேரத்துல தொல்லை பண்ணிட்டேனா. சாரி” என்றார் கல்பனா.

“இல்லமா. லக்ஷ்மி கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். இன்னிக்கு ஒரே அக்கப்போர். சரியான தலைவலி” என்றார் சங்கு புஷ்பம்.

“என்ன விஷயம் ஆன்ட்டி” என தொடர்ந்தார் கல்பனா. ஸ்பீக்கர் போனில் கேட்டபடி இருந்தார் குமரகுரு.

“இன்னைக்கு உங்க அங்கிள் ரொம்ப டென்க்ஷன் ஆயிட்டாரு. யாருன்னு தெரியாத ஒருத்தரு எங்களை பாக்கணும்னு திடீர்னு வந்துட்டாரு. அப்பாயின்மென்ட் கூட வாங்கல. ஒரே ராவடியான ஆளு” என சலித்துக் கொண்டார் சங்கு புஷ்பம்.

“என்ன ஆச்சு” என கேட்டார் கல்பனா. “என் கிளயண்ட அவ ஆட்டையை போட்டுட்டா” என்றபடி லைனில் குறுக்கில் வந்தார் நேசமணி.

மீண்டும் சங்கு புஷ்பம் தொடர்ந்தார். “அவரு கொஞ்சம் மொரடானா ஆளா இருந்தாரு. கட்சிக்காருனு சொன்னாரு. மீட் பண்ணனும் ஆனா கன்சல்டேஷன் தர மாட்டேன்னு ஒரே அடாவடி. நானும் உள்ள விடல. அப்புறம் தான் வேற வழி இல்லேன்னு குடுத்தாரு” என பொறுமையை சோதித்தார் சங்கு புஷ்பம்.

“அப்புறம் என்ன ஆச்சு” என்றார் கல்பனா.

“எங்க எல்லாருக்கும் மண்டை காஞ்சி போச்சு” என மீண்டும் குறுக்கில் வந்தார் நேசமணி.

இது சரியான காமெடி டைம் பேமிலி என நினைத்தார் குமரகுரு. இவர்கள் இவ்வளவு நார்மலாக இருக்கிறார்கள். அந்த ஆள் இவர்களை கை காட்டுகிறான் என யோசித்தார்.

“என்ன விஷயமா வந்தார்” என கேட்டார் கல்பனா.

“ரொம்ப சிம்பிள் மா. அங்கிள பாக்கணும் அவருக்கு. எலெக்க்ஷன்ல சுயேச்சையா நிக்குறீங்களானு கேட்டாரு. இவரு சுகர் பேஷண்ட்டு. சும்மாவே நிக்க முடியாது. இவரு எங்க சுயேச்சையா நிக்குறது. அவரு இன்டென்ஷன் ரொம்ப தப்பா இருந்தது. நாங்க முடியாது கெளம்புங்கன்னு சொல்லிட்டோம்” என உடைத்து பேசினார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“அவரு கதையை சொன்னாரு. நா லைப் கோச்சுனால ஊர் கதை எல்லாம் பேசினாரு. எட்டாயிரம் பீஸ் வேற குடுத்தாரு. ஒழச்சு சம்பாதிக்குறவன் எவனும் வெட்டி கதைக்கு எட்டாயிரம் தர மாட்டான். நடுவுல திரும்ப அவருகிட்ட பேச ஆரம்பிச்சுட்டான். நாலு லட்சம் தரேன்னு சொல்றான்”.

“நீங்க போக சொல்லலியா?” என்றார் கல்பனா.

“அவரு அவங்க அண்ணன் கிட்ட போன்ல பேசுறாரு. இவருகிட்ட பேசுறாரு. அப்புறம் என்கிட்டே கொஞ்ச நேரம் பேசுறாரு. அவரு எதுக்கு வந்தார்னே எங்களுக்கு புரியல. இன்னும் சொல்ல போனா நம்ம குமரஜோதி தண்ணி கேன் எடுத்துட்டு வந்தா அவருகிட்ட பேசுறாரு. அவரு வீட்டம்மாவுக்கு நல திட்ட உதவி வாங்கி தரேன்னு ஒரே அலப்பறை” என கொட்டி தீர்த்தார்.

“அப்புறம்” என்றார் கல்பனா.

“ஒரு வழியா நாங்க முடியாதுன்னு சொல்லிட்டோம். இன்னொரு விஷயம் சொல்றேன் ஷாக் ஆவாத” என சஸ்பென்ஸ் வைத்தார் சங்கு புஷ்பம்.

“அந்த ஆளு என்ன சுயேச்சையா நிக்க முடியுமான்னு கேட்டாரு. ஒரு கேண்டிடேட்டு புஷ்பாவாம். நா சங்கு புஷ்பம்னு என்ன கேட்டார்.”

“இதுக்கு மேல அவரை பத்தி என்ன சொல்றது” என கொட்டி தீர்த்தார் சங்கு புஷ்பம்.

கல்பனா தொடர குமரகுரு போனிலேயே ரிப்போர்ட் கொடுத்து விட்டார்.

தலைமைக்கு தெளிவாக ரிப்போர்ட் சென்றது.

அண்ணன் மற்றும் ரத்தினமுத்து சேகர் இருவரும் மாற்று கட்சிக்காக வேலை செய்து கட்சிக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக டம்மி வேட்பாளர்களை நிறுத்த சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.

கட்சிக்கு கெட்ட பேரையும், கட்சி கட்டுப்பாட்டையும் மீறியதால் அவர்கள் இருவரும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கபடுகிறார்கள். கட்சியின் சார்பாக புது வேட்பாளர் நாளை அறிவிக்கபடுவார்” என இரவோடு இரவாக செய்தி குறிப்பு வந்தது. அண்ணனும் ரத்தினமும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த புகாரில் கைதியானார்கள்.

மறுநாள் காலை பேப்பரில் செய்தி வந்தது.

முற்றும்.

Leave a comment